வறுமையில் தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்.. பெயிண்டிங் வேலை செய்து வயிற்றை ஆற்றும் அவலம்..!
விருதுநகரில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு உதவுமாறு தனியார் பள்ளி ஆசிரியர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ராஜபாளையம் தாலுகா நக்கனேரி என்ற கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா நோய் தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்து வேறு வழியின்றி பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.
தன்னை போலவே ஏராளமான தனியார் பள்ளி ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டே நிவாரணம் வழங்கும்படி பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததாகவும் வேதனை தெரிவித்தார். இதையடுத்து, அவரது இந்த வறுமை நிலையை வீடியோவாக பதிவு செய்து, தங்களுக்கு உதவ வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.