தமிழக மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் திடீர் உத்தரவு
உலக நாடுகளில் கொரோனா பாதித்த பட்டியலில் இந்தியா 2ம் இடத்திற்கு முன்னேறி சென்றுள்ளது. அந்த அளவிற்கு கொரோனா ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவின் பிடியில் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசும், மாநில அரசும் மக்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்த போது மறுபடியும் பள்ளிகள் திறக்க மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்தன.
நடப்பு கல்வியாண்டில் மிக தாமதமாகவே பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனை ஈடுசெய்யும் விதமாக வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் இயங்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து, பள்ளிகள் ஆறு நாட்கள் நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமையில் மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதால் வேலை நாட்களைக் குறைக்க வேண்டும் என ஆசிரியர்கள் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பள்ளிக்கல்வித் துறை, பள்ளிகள் ஐந்து நாட்கள் செயல்பட அனுமதி கொடுத்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளிகளில் நடத்தப்படும் 12ம் வகுப்புக்கு செய்முறை தேர்வுகளில், தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்தால் போதும். செய்முறைத் தேர்வு முடிந்தபின் மாணவர்கள் வீட்டிலிருந்து பொதுத் தேர்வுக்கு தயாராகலாம் என்று அறிவித்துள்ளது.