கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் கைது
கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் படித்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த மாணவி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த உக்கடம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதேசமயம் உயிரிழந்த மாணவி எழுதி வைத்த கடிதம் ஒன்று போலீஸாரிடம் சிக்கியது.
மாணவி ஏற்கனவே பயின்று வந்த சின்மயா பள்ளியில் மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அவரிடமிருந்து தப்பவே பள்ளியில் இருந்து விலகியதாகவும், இருப்பினும் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் தனது மகள் தற்கொலை செய்துகொண்டதாகவும் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார்.
இதையடுத்து மாணவி தற்கொலை சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட கடிதம் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் தற்கொலைக்கு தூண்டுதல், பாலியல் தொல்லை அளித்தல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதன் பிறகு அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் உட்பட பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து ஏற்கனவே பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்பதால், அப்படியே மூடி மறைத்துவிட்டதாகவும், எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும், பள்ளி நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தில் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் தலைமறைவான நிலையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பெங்களுரில் தலைமறைவாக இருந்த சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.