பள்ளி & கல்லூரி திறப்பு.. சுகாதார வல்லுநர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை
தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ள நிலையில், சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்றுஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊரடங்கில் கடற்கரைக்கு அனுமதி, தியேட்டர் திறப்பு என பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.
அதே சமயம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்களுக்குச் செயல்படும் என்றும் மாணவர்கள் சுழற்சி முறையில் செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் செப்டம்பர் 1இல் தொடங்கப்படுகிறது. இதர வகுப்புகள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் திங்கள்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார்.
பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு தொடர்பான எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.