தந்தை வாங்கிய கடன் பிரச்சனைக்காக வெட்டிக்கொல்லப்பட்ட பள்ளி மாணவர்
திருச்சி அருகே தந்தை வாங்கிய கடன் பிரச்சனைக்காக பள்ளி மாணவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் கிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே ராமலிங்கம் அப்பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவரிடம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் ராமலிங்கத்தின் மோட்டார் சைக்கிளை வெள்ளையம்மாள் எடுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி அதனை திருப்பி கேட்க கிருஷ்ணன் சென்றுள்ளார். அப்போது வெள்ளையம்மாளுடன் இருக்கும் பச்சமுத்து என்பவர் கிருஷ்ணனை அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தான். இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்த துவரங்குறிச்சி போலீசார் பச்சமுத்துவை கைது செய்தனர். ஆனால் வெள்ளையம்மாளை கைது செய்யாததால் கிருஷ்ணனுடன் படித்த பள்ளி மாணவர்கள் அவரை கைது செய்யக்கோரி செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.
இதற்கிடையில் சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் வெள்ளையம்மாள் பதுங்கி இருந்த தகவல் துவரங்குறிச்சி போலீசாருக்கு கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் நேற்று இரவு வெள்ளையம்மாளை கைது செய்தனர். அவரை வீடியோ காலில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு காட்டியப் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.