தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு; எப்போது பள்ளிக்கு வர வேண்டும்? - அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரக்கூடிய நேரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை வேகமாக குறைந்து வரும் சூழலில் இயல்பு நிலை விரைவில் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட்டு ஆசிரியர்கள் மட்டும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ரத்து செய்யப்பட்ட பொதுத்தேர்வுகளுக்கு மதிப்பெண்கள் போடும் பணி இருக்கும் காரணத்தால் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 50 சதவீத ஆசிரியர்கள் வாரத்தில் மூன்று நாட்களும், எஞ்சிய 50 சதவீத ஆசிரியர்கள் அடுத்த மூன்று நாட்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கால் பல்வேறு ஊர்களில் சிக்கிக் கொண்டிருப்பதால் பணிக்கு திரும்ப முடியவில்லை என்று ஆசிரியர்கள் கூறுவதாக தெரிகிறது.
இதன் காரணமாக ஒருசில ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும் பெரும்பாலான ஆசிரியர்கள் இன்னும் பள்ளிக்கு திரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, அனைத்து ஆசிரியர்களும் காலை 9 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.