அறிவியல் பாடம் நடத்தும்போது ஆபாசப்படம் - ஆசிரியரிடம் போலீசார் விசாரணை
நாமக்கலில் அறிவியல் பாடம் நடத்தும்போது ஆபாசப்படம் வந்ததால் மாணவ -மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த வடுகம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 310 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராகவும், இயற்பியல் ஆசிரியராகவும் 10 ஆண்டுகளாக எடின்பரோ கோமான் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இதனிடையே செப்டம்பர் 2 ஆம் தேதி 11ம் வகுப்பு மாணவர்கள் 21 பேருக்கு தமிழருவி இணையதளத்தில் இருந்து புரஜெக்டர் உதவியுடன் எடின்பரோ கோமான் பாடம் நடத்தியுள்ளார். அப்போது ஆபாச படம் ஒன்று ஒளிபரப்பாகியுள்ளது. அதைக்கண்டு மாணவ- மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து இரண்டு மாணவிகள் பெற்றோரிடம் கூறியதால் அவர்கள் நாமகிரிப்பேட்டை போலீசில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் நாமகரிப்பேட்டை போலீசார் ஆகியோர் வகுப்பறையில் இருந்த மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் பாடம் நடத்திய ஆசிரியர் எடின்பரோ கோமானிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.