12 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச எஸ்எம்எஸ் - ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

tngovernment pocsoact schoolteacherarrested
By Petchi Avudaiappan Jan 10, 2022 11:57 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

உடுமலையில் பள்ளி மாணவிக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச செய்தி அனுப்பிய தமிழ் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை பள்ளி மாணவி தற்கொலைக்கு பிறகு ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியுள்ளன. அந்த வகையில் உடுமலையில் பள்ளி மாணவிக்கு தமிழ் ஆசிரியர் ஒருவர் வாட்ஸ் அப்பில் தனிப்பட்ட முறையில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கரட்டுமடம் என்ற பகுதியில் அரசு உதவிப்பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் தீபலாப்பட்டியைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் அதே பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். தொடர்ந்து இரட்டை அர்த்த குறுஞ்செய்திகளை மாணவிக்கு அனுப்பி பேசி வந்துள்ளார். மாணவி இதுகுறித்து வீட்டில் யாரிடமும் கூறவில்லை. மாணவியின் குடும்பத்தினர் எதேச்சையான அவரது செல்போனை பார்த்தபோது ஆசிரியர் அனுப்பிய செய்திகளை கண்டு அதிர்ந்துப்போயினர். 

இதனையடுத்து ஜனவரி 4 ஆம் தேதி 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணிற்கு அழைத்து இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கதிர்வேல் உடுமலைப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஆசிரியர் அசோக்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவியிடம் ஆபாசமாக பேசி வந்ததும் தனிபட்ட முறையில் அவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பியதும் தெரியவந்தது.இதனை தொடர்ந்து ஆசிரியர் அசோக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த உடுமலை மகளிர் காவல் நிலைய போலீசார் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் அந்த பள்ளியில் பயிலும் வேறு எதாவது மாணவிக்கு இதேபோல் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.