விநாயகர் சிலை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
திருவள்ளூர் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை சிறுகடல் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் மகன் மோனிஷ்மற்றும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஷ்யாம் விக்னேஷ் என இருவரும் அங்குள்ள பள்ளியில் முறையே 7 மற்றும் 8ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இவர்களது வீட்டில் சிலை வைத்து கொண்டாடப்பட்டது. மாலையில் இந்த விநாயகர் சிலையை கரைப்பதற்காக, சிறுவர்கள் இருவரும் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் இணைப்பு கால்வாய் அருகே சென்றனர்.
அங்கு கால்வாயில் இறங்கி சிலையை கரைக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கால்வாயில் விழுந்ததில் இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து அவர்களை மீட்க முயன்றனர்.
ஆனால், அதற்குள் நீரில் அடித்து செல்லப்பட்டனர். உடனே இதுபற்றி தீயணைப்பு துறை மற்றும் செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். வெகு நேரமாகியும் கிடைக்காததால் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
அதற்கு பிறகு தேடியபோது, சிறுகடல் பகுதியில் சிறுவர்களின் உடல்கள் மிதந்தன. அவற்றை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.