கோவை பள்ளி மாணவி தற்கொலை - கொந்தளித்த சசிகலா
கோவை பள்ளி மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எனக்கூறி சசிகலா மீண்டும் ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார்.
அதில், "கோவை உக்கடத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, தனியார் பள்ளி ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு
இதன்காரணமாக மன வேதனையடைந்து தற்கொலை செய்து, தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.
இந்த மாணவியை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும்,
காவல்துறை நேர்மையாக விசாரித்து அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,
கல்விக் கூடங்களில் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் கல்வி நிறுவனங்களுக்கு இருக்கிறது.
இதை சரியாக கடைபிடிக்காமல் போனால் மாணவ மாணவியர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும், கல்விக்கூடங்கள் மட்டுமல்ல,
பெண்கள் வேலை பார்க்கும் அலுவலகமோ அல்லது எந்த இடமாக இருந்தாலும் இதுபோன்று பொறுப்பற்று பெண்களை அச்சுறுத்தி அவர்கள் பாதுகாப்புக்கு ஊரு விளைவிக்கும் ஆட்கள் இருந்தால்,
சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரோ, உடன் இருப்பவர்களோ அவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தான் இதுபோன்ற தற்கொலைகள் நிகழாமல் தடுக்க முடியும்.
நம் மாணவச் செல்வங்கள் குறிப்பாக மாணவிகள் மற்றும் பெண்ணாக பிறந்த அனைவரும் மிகுந்த தன்னம்பிக்கையோடு,
தைரியமாக எத்தகைய சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு வாழ வேண்டும்,. அப்போதுதான் எந்த சவால்களையும் முறியடித்து எதிலும் வெற்றி வாகை சூட முடியும் என உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இதுபோன்று தவறு இழைக்கும் கல்வி நிறுவனங்களை தமிழக அரசு கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மாணவ,
மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.