பள்ளி மாணவர்கள் சாட் செய்யவே செல்போனை பயன்படுத்துகின்றனர் வெளியான அதிர்ச்சி தகவல்!
10 சதவீத மாணவர்கள் மட்டுமே கற்றலுக்கு செல்போனை பயன்படுத்துகின்றனர் என்றும், 52 சதவீதம் பேர் சாட்டிங்கிற்கு செல்போனை பயன்படுத்துவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைமுறை படுத்தப்பட்டது தான ஆன்லைன் வகுப்புகள். முதல் அலையில் தொடங்கி இரண்டாவது அலை வரை கொரோனா வாட்டி வதைத்ததை அடுத்து நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கப்படுகிறது. இதனால் ஏனைய பள்ளி மாணவர்களின் கைகளில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட்போன்களை எந்த அளவுக்கு கற்றலுக்கு பயன்படுத்துகின்றனர் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நாடு முழுவதும் 6 மாநிலங்களில் உள்ள 60 பள்ளிகளில் 3,491 குழந்தைகள், 1,534 பெற்றோர், 786 ஆசிரியர்கள் என மொத்தம் 5,811 பேரிடம் தேசிய குழந்தைகள் நல ஆணையம் ஆய்வு நடத்தியது. அதில், 10.1 சதவீத மாணவர்கள் மட்டுமே கற்றலுக்கு செல்போனை பயன்படுத்துகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
52.9 சதவீத மாணவர்கள் சாட்டிங்கிற்கு மட்டுமே செல்போனை பயன்படுத்துகின்றனர். 10 வயது குழந்தைகளில் 37.8 சதவீதம் பேர் ஃபேஸ்புக்கும், 24.3 சதவீதம் பேர் இன்ஸ்டாகிராமும் பயன்படுத்துகின்றனர். 8 முதல் 18 வயதுடைய மாணவர்களில் 30 சதவிகிதம் பேர் சொந்தமாக செல்போன் வைத்துள்ளனர்.
இந்த ஆய்வின் மூலம் செல்போன் பயன்பாடு மாணவர்களின் கல்வி பாதையை வழி மாற்றி கொண்டு சென்றுள்ளது. எனவே குழந்தைகள் செல்போனை தேவையற்ற காரணங்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க
நிலையான வழிகாட்டுதல்களை ஏற்படுத்த வேண்டும் என்று தேசிய குழந்தைகள் நல ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.