7 வயது சிறுவனை தலைகீழாக தொங்கவிட்ட கொடூர தலைமை ஆசிரியர்: அதிர்ச்சி சம்பவம்!
உத்தரபிரதேசத்தின் ஒரு பள்ளியில், சக மாணவனோடு சண்டையிட்ட மாணவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
உத்தரபிரதேசத்தின் பிஜப்பூர் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது 2ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர், சக மாணவரை கடித்துள்ளான்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற தலைமை ஆசிரியர், சிறுவனை மன்னிப்பு கேட்குமாறு கண்டித்துள்ளார். அந்த சிறுவனோ அதை மறுக்க, ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் அந்த சிறுவனை தர தரவென மாடிக்கு இழுத்து சென்று, மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கீழே போட்டுவிடுவேன் என்று கூறி, ஒரு காலை பிடித்து தலைகீழாக தொங்கவிட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதனால் அலறிய அந்த மாணவன், அம்மா அம்மா என்று கதறி அழுதுள்ளான். இதனால் பள்ளியே அந்த இடத்தில் கூட்டம் கூடியது. அதனை தொடர்ந்து மாணவனை அந்த ஆசிரியர் விடுவித்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, தலைமை ஆசிரியரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.