மாணவனை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர்கள் - நெஞ்சை உலுக்கிய சம்பவம்
பள்ளி மாணவனை தாக்கிய இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவன் மீது தாக்குதல்
திருவண்ணாமலை, போளூர் அடுத்த செங்குணம் ஊராட்சிக்குட்பட்ட கொல்லமேடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
அதில் 5 ஆம் வகுப்பு படித்து வரும் ஜோதிஸ்வரன் என்ற மாணவனை சமையலர் லட்சுமி தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்த விசாரணையில், மதிய உணவின் போது மாணவர்களுக்கு முட்டை வழங்கும் பொழுது சில மாணவர்களுக்கு சமையலர் லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மாள் இருவரும் முட்டை வழங்காமல் இருந்துள்ளனர்.
அப்போது சில மாணவர்கள் தங்களுக்கு முட்டை வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு சமையலாளர் இருவரும் முட்டை காலி ஆகிவிட்டது என்று கூறியுள்ளனர். உடனே மாணவன் ஜோதிஸ்வரன், “உள்ளே எடுத்து வைத்துள்ள முட்டையை கொடுங்கள்..” என்று கூறியிருக்கிறார்.
அதிர்ச்சி சம்பவம்
இதனால் அதிர்ச்சியடைந்த சமையலர் லட்சுமி உள்ளே வைத்திருந்த மூன்று அவித்த முட்டைகளை எடுத்து கொடுத்துள்ளனர். தொடர்ந்து ஆத்திரத்தில் சமையலர் தனது உதவியாளர் முனியம்மாவை அழைத்துக் கொண்டு வகுப்பறையில் இருந்த மாணவனை துடைப்பத்தை எடுத்து வந்து சரமாரியாக அடித்துள்ளார்.
இந்நிலையில், மாணவனை தாக்கிய சமையலர் லட்சுமி மற்றும் அவரது உதவியாளர் முனியம்மாள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பள்ளி ஆசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளர் ஆகிய இருவரையும் பணிமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி தலைமையாசிரியர் கொடுத்த புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.