மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என சுவரொட்டிகள் ஒட்டி பெற்றோர்கள் போராட்டம்

case school sexual harassment one arrested male teachers one hidden
By Swetha Subash Dec 30, 2021 12:24 PM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வரை மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளுக்கே சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் நடத்தி வருகின்றனர்.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெருமாள்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 197 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் டிசம்பர் 7 ஆம் தேதி மாவட்ட குழந்தைகள் நல மையம் சார்பாக பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

அப்போது பாலியல் தொந்தரவு குறித்து 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கூறப்பட்டது.

இதனையடுத்து இப்பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் சில மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு இலவச என்னை தொடர்பு கொண்டு,

கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜ் ஆகியோர் தங்களை அடிக்கடி தொட்டு பேசுவதும், இரட்டை அர்த்தத்திலும் பேசுகின்றனர்,

வீட்டிற்கு சென்ற பிறகு போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொந்தரவு செய்கின்றனர் என புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமார் பெருமாள்கோவில் அரசு பள்ளியில் விசாரணை செய்து தொடர்ந்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் டிசம்பர் 24 ஆம் தேதி ஆசிரியர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் சமூக அறிவியல் ஆசிரியர் விருதுநகரை சேர்ந்த ராமராஜ்,(39) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபுவை போலீசார் தேடி வருகின்றனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இரண்டு ஆசிரியர்களையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுத்து உத்தரவிட்டார்.

தலைமறைவாக உள்ள ஆல்பர்ட் வளவன் பாபுவை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும், பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநிலை குறித்த ஆலோசனை வழங்கும் வரை மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெருமாள்கோவில் கிராம மக்கள் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து தலைமறைவாக உள்ள ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.