இந்த 4 மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை வெள்ளம்
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை சென்னையை புரட்டிப்போட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பலர் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். புயல் உருவாவதற்கு முன்பே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வியாழக்கிழமை முதலே பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வரும் 7ம் தேதி (நாளை) முதல் 22ம் தேதி வரை 10ம், 11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 11ம் தேதி முதல் 21ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
தேர்வுகள் ஒத்திவைப்பு
இந்நிலையில் அரையாண்டு தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை சீரானவுடன் இந்த 4 மாவட்டங்களுக்கு மட்டும் தனித்தனியாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளநீர் தேங்கியுள்ளதால் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.