எட்டி பார்த்த மாணவர்கள் - அவமானத்தால் விபரீத முடிவெடுத்த பள்ளி முதல்வர்
வீடியோ வைரலானதால் பள்ளி முதல்வர் விபரீத முடிவெடுத்துள்ளார்.
போதையில் பள்ளி முதல்வர்
மகாராஷ்டிராவின் நாந்தெட் மாவட்டதில் உள்ள லிம்போட்டி கிராம பள்ளியில் முதல்வராக உள்ள 55 வயதான நபர் மது போதையில் பள்ளிக்கு வந்துள்ளார்.
அவரது அறையை எட்டி பார்த்த மாணவர்கள் பள்ளி முதல்வர் மது போதையில் இருப்பதை பார்த்து தங்களது பெற்றோர் மற்றும் கிராமத்தினருக்கு தெரிவித்துள்ளனர்.
வீடியோ வைரல்
இந்த தகவல் மாவட்ட கல்வி அதிகாரிக்கு தெரிய வர, அவர் விசாரணைக்காக 3 அதிகாரிகளை பள்ளிக்கு அனுப்பியுள்ளார். அப்போது சரியாக பதில் கூட பேச முடியாமல் பள்ளி முதல்வர் மது போதையில் இருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பள்ளி முதல்வர் மதுபோதையில் இருப்பதை வீடியோ எடுத்த கிராமத்தினர், அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். பள்ளி முதல்வர் வீட்டிற்கு சென்று போதை தெளிந்த பின், தான் போதையில் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
விசாரணை
அதன் பின்னர், தனது அறைக்கு சென்ற அவர் மறுநாள் வரை வெளியில் வரவில்லை. நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால், குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கி சடலமாக கிடந்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். மது போதையில் உள்ள வீடியோ வெளியானதால் அவமானத்தில் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் - 044-24640050.