நடிகர் சுதீப் ஸ்டைல் வேண்டாம் - பள்ளி தலைமை ஆசிரியர் கடிதம்!
பள்ளியின் தலைமை ஆசிரியர் நடிகரின் ஸ்டைல் வேண்டாம் என்று கடிதம் எழுதியுள்ளார்.
நடிகர் சுதீப்
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் 1997-ல் வெளியான தயாவ்வா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழில் நான் ஈ என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், இவர் பல படங்களில் வில்லனாகவும், கதாநாயகனாவும் நடித்துள்ளார்.
இவர், இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான 'ஹெப்பிலி' என்ற திரைப்படத்தில் தலையில் ஒரு பக்கத்தில் முடியை வெட்டி இன்னொரு பக்கம் நீளமாக விட்டு வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் நடித்திருப்பார். அது தற்பொழுது டிரெண்டில் உள்ளது.
தலைமை ஆசிரியர் கடிதம்
இந்நிலையில், மாணவர்கள் பலர் இந்த ஹேர் ஸ்டைலை விரும்பி வைத்துக்கொள்கின்றனர். இதனால் கர்நாடகா, பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள சிவாஜி நாயக் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர், சலூன் கடைக்காரர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "ஹெப்பிலி படத்தின் சுதீப் சிகை அலங்காரத்தை போன்று தலையில் ஒரு ஓரத்தில் முடியை வெட்டிவிட்டு மற்றொரு ஓரத்தில் முடியை நீளமாக வைத்துக்கொண்டு வருகிறார்கள். நாங்கள் அனைத்து மாணவர்களிடமும் முறையான ஹேர்ஸ்டைலில் வரும்படி அறிவுறுத்தியுள்ளோம்.
ஆனாலும், சிலர் அப்படிதான் வருகிறார்கள். மாணவர்கள் சினிமாவினால் மிகவும் எளிமையாக ஈர்க்கபட்டு விடுகிறார்கள். இந்த பழக்கத்தால் கல்வியில் அவர்களுக்கு ஆர்வம் குறைகிறது. பள்ளி மாணவர்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி தலைமுடியை திருத்துங்கள். ஹெப்பிலி பட சுதீப் பாணியில் ஹேர்ஸ்டைல் செய்ய வேண்டாம்" என்று கூறியுள்ளனர்.