அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை: அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை மாணவர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பிய விவகாரத்தில், பள்ளித் தலைமையாசிரியை மல்லிகா பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
விசாரணையில், தலைமையாசிரியை தன்னிச்சையாக துறையின் உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி செயல்பட்டது உறுதியானதால், உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும், அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்த அரசியல் கட்சியின் நிகழ்ச்சிகளையும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காண்பிக்கக் கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாகவும், அதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.
"பள்ளிக்கூடம் கல்விக்காகவே; அரசியலுக்காக அல்ல" என்ற கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிப்போம் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் தலைமையாசிரியர்களுக்கும் மீண்டும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தி அறிக்கை:
— Rajmohan (@imrajmohan) July 10, 2026
அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி!
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித்… pic.twitter.com/f7bWenCFu0