தலைமை ஆசிரியரை தாக்க முயன்ற பள்ளி மாணவன் கைது..!

School Arrest Attack Student Salem Headmaster மாணவன் சேலம்
By Thahir Mar 29, 2022 08:35 AM GMT
Report

 சேலத்தில் பள்ளி தலைமையாசிரியரை தாக்க முயன்ற ப்ளஸ் 2 மாணவனை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே மஞ்சினி கிராமத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ப்ளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர் தலைமுடியை வெட்டாமல் கொண்டை போட்டு வந்துள்ளார்.

இதை பார்த்த தலைமையாசிரியர் அந்த மாணவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர் தலைமையாசிரியரை எதிர்த்து சத்தம் போட்டதுடன் அறையில் இருந்த பொருட்களை அடித்து தள்ளிவிட்டுள்ளார்.

மாணவனின் சத்தம் கேட்டு ஓடி வந்த சக ஆசிரியர்கள் மாணவனை சமாதனப்படுத்தி பெற்றோரை அழைத்து வரச் சொல்லியுள்ளனர்.

அப்போது மாணவன் பீர் பாட்டிலை மறைத்து எடுத்து வந்த அவன் பெற்றோரிடம் பேசி கொண்டிருந்த தலைமை ஆசிரியரை குத்த முயன்றுள்ளான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமையாசிரியர் கூச்சலிடவே சக ஆசிரியர்கள் ஓடி வந்துள்ளனர். மாணவனின் கையில் இருந்த பீர் பாட்டிலை பிடுங்கினர்.

தலைமை ஆசிரியர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்,தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் மாணவனிடம் சமாதானம் பேசியுள்ளனர்.

ரவுடிகள் தான் இப்படி பண்ணுவாங்க,நீ படிக்கிற பையன் என்று சொல்ல நானும் ரவுடி தான் இப்ப என்ன பண்ணணும் என்று எதிர்த்து பேசியுள்ளார்.

இதனிடையே பள்ளி தலைமை ஆசிரியர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாணவனை கைது செய்த போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.