'மாணவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கும் தனியார் பள்ளி' - என்ன காரணம் தெரியுமா?

kanchipuramschool landpatta studentsgetland barathithasanschool
By Swetha Subash Apr 08, 2022 11:37 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

பத்தாண்டுகள் தொடர்ச்சியாக படிப்பில் முதலிடம், ஒழுக்கம் , கீழ்ப்படிதல் என சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் வீட்டுமனை வழங்கி ஊக்குவிக்க இருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே பள்ளி மாணவ, மாணவிகள் செய்கைகள் குறித்த செய்தி மற்றும் வீடியோக்களால் மாணவர் ஓழுக்கமின்மை குறித்த சர்ச்சைகள் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுமார் 4500 மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர்.

இப்பள்ளியில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கு முதலில் சொல்லும் அறிவுரை, உடன் பயிலும் அனைவரும் நம்முடைய சகோதர, சகோதரிகள் என எண்ண வேண்டும் என்பதுதான்.

பெற்றோர், ஆசிரியருக்கு கீழ்படிதல், பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தலின்படி ஓழுக்கம், சிகை அலங்காரம், வரிசையில் செல்லுதல், உள்ளிட்டவைகளுக்கு சிறந்த உதாரணம் என இப்பள்ளியை கூறலாம்.

இவைகளை மீறுபவர்களுக்கு இப்பள்ளியில் இடம் இல்லை. மாணவர் மற்றும் பெற்றோரிடம் கண்டிப்பு காட்டுவதால் கல்வியில் சிறந்து அரசு தேர்வில் 100% தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

இவைகளை முறையாக மாணவ, மாணவிகள் பின்பற்றி நடப்பதால் ஆண்டு தோறும் பெற்றோர்களுடன் விமான டிக்கெட் வழங்கி சுற்றுலா செல்ல மாணவர்களை ஊக்குவித்து வருகிறது பள்ளி நிர்வாகம்.

தற்போது பத்து வருடங்களாக தொடர்ச்சியாக முதலிடம், பள்ளிக்கு விடுமுறையின்றி வருதல், ஒழுக்கம் ஆகியவைகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளில் 300 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வீட்டுமனை பரிசாக வழங்கும் விழா விரைவில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்த விளம்பர பதாகைகள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை பிற மாணவர்களையும் இதுபோன்று செயல்பட ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது.

இதுகுறித்து நிர்வாகி கூறுகையில், தற்போது கல்வியே மாணவர்களுக்கு சிறந்த அழியா சொத்து என்பதை உணர்த்தும் வகையில் இப்பள்ளி தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் சிறந்த மாணவ, மாணவிகளை ஒழுக்கத்தோடு உருவாக்கி, அவர்களை அவர்களின் பெற்றோர்களிடம் மீண்டும் ஓப்படைப்பதில் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறோம். அதற்கு எங்கள் கல்வி குழும நிர்வாகிகள், ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது என கூறினார்.

பள்ளியில் படித்து முடித்து வேலைக்கு செல்லும் முன்பே வீடுமனை வழங்குவது அறிவிப்பு மாணவ மாணவியர் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.