ரத்தக்கறை; மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை - கொந்தளித்த பெற்றோர்!
மாணவிகளின் சீருடையை களைந்து மாதவிடாய் சோதனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாதவிடாய் சோதனை
மகாராஷ்டிரா, தானே மாவட்டத்தில், ஆர்.எஸ். தமானி எனும் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு பள்ளியின் கழிவறையில் ரத்தக் கறைகள் இருந்துள்ளன.
இதுகுறித்து அறிந்த பள்ளி நிர்வாகம் அந்தப் பள்ளியில் 5 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளைப் பள்ளியின் கன்வென்ஷன் அறைக்கு வரவழைத்துள்ளனர். பின் ரத்தக் கறை இருந்த புகைப்படங்களை புரோஜெக்டர் மூலம் காட்சிப்படுத்தி, மாணவிகளில் யாருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பள்ளி முதல்வர் கைது
அப்போது மாதவிடாய் இருக்கும் மாணவிகளின் கட்டைவிரல் ரேகையை வாங்கியுள்ளனர். தொடர்ந்து மாதவிடாய் இல்லை எனத் தெரிவித்த சிறுமிகளை ஒவ்வொருவராக கழிவறைக்கு அழைத்துச் சென்று அவர்களின் சீருடையைக் களைந்து பரிசோதித்துள்ளனர்.
இது குறித்து சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனே, தகவலறிந்து விரைந்த போலீஸார் பெற்றோரிடம் உறுதியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்.
தொடர்ந்து, பள்ளி முதல்வர், நான்கு ஆசிரியர்கள், உதவியாளர் மற்றும் இரண்டு அறங்காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, பள்ளி முதல்வரும் சோதனையிட்ட பெண் உதவியாளரையும் கைது செய்துள்ளனர்.