பெற்றோர் உஷாரா இருங்க.. வாட்ஸ்அப் மூலம் ஊக்கத் தொகை மோசடி - அரசு எச்சரிக்கை!
மாணவர்களுக்கு ஊக்கத் தொகை பெற்றுத் தருவதாக மோசடி குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க அரசு எச்சரிக்கை எச்சரித்துள்ளது.
ஊக்கத் தொகை
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு 10 நாட்கள் தொழிற் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு ரூ.1000 ஊக்கத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது. இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் ஆதார் பதிவுத் திட்டம் உட்பட செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதை சாதமாக பயன்படுத்திக் கொண்டு சில மோசடி கும்பல்கள் மாணவர்களின் பெற்றோரை வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் செயலில் திருநெல்வேலி உட்பட சில மாவட்டப் பகுதிகளில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மோசடி
இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் 10, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோரை அணுகி கல்வித்துறையில் இருந்து ஊக்கத்தொகை பெற்று தருவதாகக் கூறி, வாட்ஸ் அப் மூலம் க்யூஆர் கோடு அனுப்பி அதை ஸ்கேன் செய்தால் உதவித்தொகை கிடைக்கும் என நம்பவைத்து ஏமாற்றி அவர்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர்.
இந்த மோசடி கும்பலிடம் ஏமாந்த சுமார் 10 பேர் சைபர் க்ரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பள்ளியில் பெற்றோர் கூட்டம் நடத்தப்படும் போது ஊக்கத் தொகை தொடர்பாக போனில் தொடர்பு கொண்டு அரசு தரப்பில் யாரும் பேசமாட்டார்கள் என்றும் ,
அவ்வாறு போன் செய்யும் நபர்களிடம் வங்கிக்கணக்கு குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டாம் எனவும் எடுத்துரைத்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் பெற்றோருக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதுசார்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.