தமிழகத்தில் பள்ளி கல்லுாரிகள் திறப்பு - மாணவர்கள் உற்சாக வருகை

College School Opening
By Thahir Sep 01, 2021 03:11 AM GMT
Report

தமிழகத்தில் இன்று முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன அதோ போல் கல்லுாரிகளும் திறப்பு.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக, கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன.  

இடையில் அவ்வப்போது ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கும், செமஸ்டர் மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டாலும் நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து இருந்ததால் மீண்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகளும் நடத்தப்படாமல் பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தன. தற்போது நோய் பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது.  

தமிழகத்தில் பள்ளி கல்லுாரிகள் திறப்பு - மாணவர்கள் உற்சாக வருகை | School College Open Tamilnadu

அதன்படி, ஒவ்வொரு துறை சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தை கூட்டி, சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்பது குறித்தெல்லாம் ஆலோசித்து, ஊரடங்கு தளர்வில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியானது.

அந்த அறிவிப்பின் படி, பள்ளிகள், கல்லூரிகள் இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட இருக்கின்றன. அந்தவகையில் பள்ளிகள் 4 மாதங்களுக்கு பிறகும், கல்லூரிகள் 5 மாதங்களுக்கு பிறகும் திறக்கப்பட உள்ளன.

பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. கல்லூரிகளை பொறுத்தவரையில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர பிற மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும், அதில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் அனைத்து நாட்களிலும் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கின்றன.

பள்ளிகள், கல்லூரிகள் வகுப்பறையில் 50 சதவீத மாணவர்களுடன், வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கல்வி நிலைய வளாகங்கள் அனைத்தும் தூய்மையாக வைத்திருக்கவும், கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றன.  

பள்ளிகள், கல்லூரிகள் நேற்று முழுவதும் கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன. சமூக இடைவெளியோடு வகுப்பறையில் மாணவர்கள் அமருவதற்கு ஏற்றவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதற்கேற்ற வகையில் முன்னேற்பாடுகள் அனைத்தும் கல்வித்துறை சார்பில் செய்யப்பட்டு இருக்கிறது. ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு தடுப்பூசி போட்ட ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாணவர்கள் நீண்ட நாட்களுக்கு பின்பு பள்ளி,கல்லுாரிகளுக்கு செல்வதால் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடன் சென்று வருகின்றனர்.