கொட்டும் கனமழை : 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் வடகிழக்கு பருவமழையால் இன்று 14 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு, தென் மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது. சென்னையில் இருந்து 150 கி.மீ., தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளது.
இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இக்காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் விடாது கனமழை கொட்டி வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.வங்க கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 18 கி.மீ.வேகத்தில் நகர்ந்து சென்னை அருகே கரையை கடப்பதால் கனமழை கொட்டி வருகிறது.
இதனால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தீவிர மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறைவிடப்பட்டுள்ளது.