ரூ.60,000 கோடி ஊழல், துரைமுருகன் அமைச்சர் பதவி அம்பேல்.. - மிரட்டும் குடியாத்தம் குமரன்!

Tamil nadu DMK Durai Murugan
By Jiyath Nov 23, 2023 05:15 AM GMT
Report

குடியாத்தம் குமரன்

திமுகவில் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராக இருந்த குடியாத்தம் குமரனை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன்.

ரூ.60,000 கோடி ஊழல், துரைமுருகன் அமைச்சர் பதவி அம்பேல்.. - மிரட்டும் குடியாத்தம் குமரன்! | Scam Allegation Against Dmk Minister Duraimurugan

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் பேசியதன் காரணமாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து இழிவான வார்த்தைகளால் குடியாத்தம் குமரன் திட்டிப் பேசினார். மேலும், நடிகை விந்தியா குறித்தும் இழிவாகப் பேசியதால், குமரன் மீது அதிமுக நிர்வாகி விந்தியா போலீசில் புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து குடியாத்தம் குமரன் மீது, 3 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'எம்.பி கதிர் ஆனந்த் என் குடும்பத்தை பழிவாங்க துடிக்கிறார். துரைமுருகனும் கட்சியிலிருந்து என்னை நீக்கப் பார்க்கிறார். என் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று குமரன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இது திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்தே குடியாத்தம் குமரன் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள்

இந்த அறிவிப்பு வந்தவுடனையே துரைமுருகன் பற்றியும், அவரது மகனும், எம்.பி.யுமான கதிர் ஆனந்த் பற்றியும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார் குடியாத்தம் குமரன்.

ரூ.60,000 கோடி ஊழல், துரைமுருகன் அமைச்சர் பதவி அம்பேல்.. - மிரட்டும் குடியாத்தம் குமரன்! | Scam Allegation Against Dmk Minister Duraimurugan

அதில் "எனக்கும் அமைச்சர் துரைமுருகனுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. கதிர் ஆனந்த் தான் இந்த மாவட்டத்துக்கே பிரச்சனை. சேர்மன் தேர்தலில் திமுகவை எதிர்த்து நின்ற பாமகவுக்கு, ஒரு பெரிய தொகைக்கான டெண்டரை வழங்கியுள்ளார் கதிர் ஆனந்த். திமுககாரனுக்கு எதிராகவே கதிர் ஆனந்த் செயல்பட்டு வருகிறார். தலைவர் ஸ்டாலினும், உதயநிதியும் கட்சிக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆனால் துரைமுருகன் குடும்பம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. மணல் விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் ரூ.60,000 கோடி சம்பாதித்துள்ளார். அது பற்றிய உண்மைகளை வெளியிடுவேன்.

அமைச்சர் துரைமுருகன், எம்.பி கதிர் ஆனந்த் இருவரும் ஏலகிரி மலை பங்களாவில் பேசிய முக்கியமான ஆடியோ பதிவுகளை வைத்திருக்கிறேன். மணல் விவகாரங்களில் நடந்த ஊழல் சம்பந்தமான ஆவணங்களும் கிடைத்திருக்கின்றன. அவற்றையெல்லாம் விரைவில் வெளியிடுவேன். நான் அவற்றை வெளியிட்டால் அடுத்த 10 நிமிடத்தில் துரைமுருகனுக்கு அமைச்சர் பதவி இருக்காது." என்று பரபரப்பான குற்றச்சாட்டுகளை குடியாத்தம் குமரன்முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.