இம்ரான் கானுக்கு மேலும் சிக்கல் - நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்து செல்லாது என தீர்ப்பு
பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்தது செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் பிரதமர் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதனால் இம்ரான் கானுக்கு கொடுத்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் வாங்கிக் கொண்டது.
ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று பாராளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்தார்.
மேலும் இடைக்கால பிரதமராக இம்ரான் கான் செயல்படுவார் என்றும், அங்கு 90 நாட்களில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பாகிஸ்தானில் நடைபெறும் அரசியல் குழப்பத்தால் அங்கு எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உமர் அடா பண்டியால் அனைத்து நீதிபதிகளின் கூட்டத்தை கூட்டி அதில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்தது செல்லாது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான குடியரசுத் தலைவரின் உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.