நீதிமன்ற அனுமதியுடன் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகலாம் - உச்சநீதிமன்றம்
நீதிமன்ற அனுமதியுடன் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகலாம் என உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி
தமிழ்நாடு மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதன் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது.
ஜாமீன் கிடைத்த சில நாட்களில் மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றார். இதனையடுத்து ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
ஜாமீன் அல்லது அமைச்சர் பதவி இதில் ஒன்றை தேர்வு செய்யுமாறு உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, நீதிமன்ற தீர்ப்பில் உள்ள கடுமையான கருத்துக்களை நீக்குமாறு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில், "வழக்கு விசாரணையில் உள்ள போது குற்றஞ்சாட்டப்பட்டவர் அமைச்சராக நீடிக்கக்கூடாது என கூற முடியாது என்ற வாதத்தை முன்வைத்தார்.
உச்சநீதிமன்ற அனுமதி
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், "செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அவர் அமைச்சராக இருந்தால் சாட்சிகளை கலைக்க கூடும். அவர் அமைச்சராக இல்லாத காரணத்தாலே ஜாமீன் வழங்கப்பட்டது.
அவர் அமைச்சர் ஆவதை நீதிமன்றம் தடுக்கவில்லை. ஆனால் அமைச்சரான பின்னர் சாட்சியை கலைப்பதாக புகார் வந்தால் ஜாமீனை ரத்து செய்ய நேரிடும்.
செந்தில் பாலாஜி அமைச்சராக விரும்பினால் அது தொடர்பாக உரிய மனு அளித்து நீதிமன்ற அனுமதியுடன் அமைச்சராகலாம்" என தெரிவித்தார்.
சாட்சியை கலைக்க முயற்சிப்பதாக எந்த புகாரும் வரவில்லை. இன்னும் வழக்கு விசாரணையை தொடங்கப்படவில்லை கபில் சிபில் என தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசின் சோசிலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வேண்டுமென்றே வழக்கு விசாரணையை தாமதப்படுத்த பல்வேறு மனுக்களை தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளை டெல்லிக்கு ஏன் மாற்றக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதி, இது தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.