பேரறிவாளன் விடுதலை விவகாரம் : மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதிகள்!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து தற்போது பிணையில் உள்ள பேரறிவாளன்,தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்த நிலையில்,அதன் மீதான விசாரணை கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர்ராவ் அமர்வு கூறுகையில், பேரறிவாளனை விடுவிக்க வேண்டியது தானே, பேரறிவாளனை யார் விடுவிக்க வேண்டும் என்பதில் உள்ள சிக்கல்களில் ஏன் ஆளுநர் சிந்திக்க வேண்டும் எனவும்,பேரறிவாளனை ஏன் விடுவிக்க கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து, பேரறிவாளனை விடுவிப்பதே இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு என கருதுகிறோம் என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில்,மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என்று மத்திய அரசு கூறினால், பேரறிவாளனை உடனே விடுதலை செய்து உத்தரவிடுகிறோம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்கு குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி உள்ளனர்.
‘பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது ஏன்? பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்க காலதாமதம் ஏன்?
பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்கும் பிரச்சினையில் மத்திய அரசு தலையிடுவது ஏன்?
ஒவ்வொரு முறையும் ஆளுநர் ஏதாவது ஒரு விளக்கம் கேட்டு முடிவு எடுக்க தாமதப்படுத்துகிறார்.
30 ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுவிக்க மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை என்றால் நாங்கள் முடிவெடுப்போம்.’ என கூறினர்.
வருகின்ற செவ்வாய்க்கிழமைக்குள் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால் அரசியலமைப்பின்படி உச்சநீதிமன்றமே முடிவு எடுக்கும் என கூறிய நீதிபதிகள் வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.