லக்கிம்பூர் வன்முறை சம்பவம் : சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த ஆண்டு வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதனை தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களில் மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியா முழுவதும் பெரும் கொந்தலிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான சிறப்பு அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்தது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர் சார்பாக ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சாட்சியங்கள் மிரட்டப்படுவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளதால் சாட்சிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பிரசாந்த் பூஷண் தெரிவித்தார்.
இதனை கேட்ட நீதிபதிகள் மேல் முறையீடு மனு தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் உத்தரபிரதேச அரசு பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
மேலும் சாட்சியங்களை நீதிமன்றம் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கைகளை உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்