திருப்பரங்குன்ற தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
supreme court order to light deepam on tiruparankundram dhoon: திருப்பரங்குன்ற மலையில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பரங்குன்ற தீப விவகாரம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவிலிலே நேற்று தீபம் ஏற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலை அடிவாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அவமதிக்கப்பட்டுள்ளது, தூணில் கார்த்திகை மாதத்திற்குள் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தர்ம பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை இரும்புக்கரம் கொண்டு செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால் அரசியலமைப்பு சீர்குலைவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் நடத்தையால் நிர்வாகக் குழப்பம் ஏற்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.
நீதிமன்ற உத்தரவை பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பாகப் பார்க்கக் கூடாது. நீதிமன்ற உத்தரவை நீதிமன்றமே மாற்றும் வரை அதை மீற முடியாது. மாநில அரசும் கோயில் நிர்வாகமும் கூட்டுச் சேர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் கொடுத்த வாக்குறுதியை மீறியுள்ளன.

இது நீதிமன்ற உத்தரவை அப்பட்டமாகவும், துணிச்சலாகவும் மீறிய செயலாகும். கோயில் நிர்வாகம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, நீதிமன்ற உத்தரவுக்குத் தவறான விளக்கம் அளித்து வேண்டுமென்றே செயல்பட்டுள்ளது.
தர்காவில் இருந்து 50 மீட்டர் சுற்றளவு தாண்டி அனைத்து பக்கங்களிலும் தீபம் ஏற்றலாம், தர்காவுக்கும் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்க வேண்டும். எந்த வகையிலும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவின் செயல்பாட்டில் தடங்கல் இருக்கக்கூடாது. திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் தர்காவை வேறுபடுத்தும் விதமாக தர்காவைச் சுற்றி வேலி அமைக்கலாம் என தெரிவித்துள்ளது.
கோவில் நிர்வாக அறங்காவலர் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள உச்சநீதிமன்றம், அறங்காவலர் குழுவை கலைத்ததோடு, முன்னாள் நீதிபதி வைத்தியநாதன் தலைமையில் கோயில் நிர்வாகக் குழுவை நியமித்தது.
மதுரை மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை நிராகரித்ததோடு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.