நாளை தமிழ்நாடு ஆளுநரை சந்திக்கும் சவுக்கு சங்கர் - முதலமைச்சர் மீது புகார் அளிக்க திட்டம்?
சவுக்கு சங்கர் நாளை (செவ்வாய்கிழமை ) பிற்பகலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் மீது புகார்
அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் திமுக அரசு மீது தொடர்ந்து பலவேறு புகார்களை தெரிவித்து வருகிறார். அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று நேரடியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி ஆகியோர் மீது ஒரு புகார் கொடுத்தார்.
மேலும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோகம் செய்த வாரிசு, துணிவு திரைப்படங்களுக்கு விதிமுறையை மீறி அதிகாலை திரையிட அனுமதித்ததாகவும், இதன் மூலமாக முதலமைச்சர் குடும்ப உறுப்பினரான உதயநிதி ஆதாயம் பெற்றதாகவும, இதன் அடிப்படையில் அவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர், லஞ்ச ஒழிப்புத்துறை என புகார் மீது நடவடிக்கை எடுக்காது. எனவே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் கொடுப்பேன் என தெரிவித்து இருந்தார்.
ஆளுநரை சந்திக்கும் சவுக்கு சங்கர்
இதையடுத்து ஆளுநரை சந்திக்க அனுமதி கேட்டு ராஜ் பவனுக்கு அவர் கடிதம் கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க சவுக்கு சங்கருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
ஜனவரி 31ம் தேதி செவ்வாய்க் கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கொடுத்த அதே புகாரை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சவுக்கு சங்கர் கொடுப்பார் என தெரிகிறது.
பொதுவாக ராஜ்பவன் தரப்பில் இதுபோன்ற சந்திப்புகள் குறித்து முன்கூட்டியே தகவல் ஏதும் வெளியிடுவதில்லை.அந்த வகையில் இதுபற்றியும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.