ஜி ஸ்கொயர் குறித்து பேச சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் தடை

Tamil nadu
By Irumporai Sep 08, 2022 09:37 AM GMT
Report

ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர் 

தங்கள் நிறுவனத்தை பற்றி சவுக்கு சங்கர், பல்வேறு சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அவதூறு கருத்துக்களை வெளியிட்டு வருவதால், அதற்கு தடைவிதிக்க கோரி தென்னிந்தியாவை சேர்ந்த ஜி ஸ்கொயர் என்கிற கட்டுமான நிறுவனம் சார்பில் அதன் அதிகாரம் பெற்ற நபரான என்.விவேகானந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சவுக்கு சங்கரின் அவதூறு கருத்துகள் காரணமாக, தங்களது நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்களில் 28 பேர், முன்பதிவை ரத்து செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி ஸ்கொயர்  குறித்து பேச சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் தடை | Savukku Shankar Defamatory Comments About G Square

 நஷ்டஈடு

இதனால், 15 கோடி ரூபாய் திரும்ப அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் தங்களுக்கு இது போன்ற பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதனால் மான நஷ்டஈடாக ஒரு கோடியே பத்தாயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஜிஸ்கொயர் வழக்கு 

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது, எந்த வித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் தொடர்ச்சியாக ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்தும், தொழில் குறித்தும் சவுக்கு சங்கர் அவதூறாக பேசி வருவதாக, அந்நிறுவனத்தின் சார்பில் வாதிடப்பட்டது.

மேலும், பொள்ளாச்சியில் தங்களது நிறுவனத்திற்கு எந்த திட்டமும் இல்லாத நிலையில் முதலமைச்சர் பயணத்தை தங்களது நிறுவனத்துடன் தொடர்புப்படுத்தி சவுக்கு சங்கர் பேசியிருப்பதாகவும் ஜி ஸ்கொயர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி கார்த்திகேயன், ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து பேச சவுக்கு சங்கருக்கு தடை விதித்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.