வேங்கை வயல் சென்ற சவுக்கு சங்கர் : கிராம மக்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்

By Irumporai Jan 24, 2023 10:50 AM GMT
Report

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் இன மக்களுக்கு விநியோகிக்கப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம்  பதட்டத்தை ஏற்படுத்தியது.

வேங்கை வயல் சம்பவம்

இந்த சம்பவம் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் சென்று ஆய்வு செய்தனர், இதனிடையே இந்த வழக்கினை சிபிசிஐடி போலிசாரும் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் பட்டியல் இனமக்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு கொடுத்த நிலையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் இந்த சம்பவம் அரங்கேறிய வேங்கை வயல் கிராமத்திற்கு சென்று இந்த சம்பவம் குறித்து அங்குள்ள மக்களிடம் கேட்டறிந்தார் அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில்  

பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தேன். இந்த பகுதியில் 30 வீடுகள் இருந்த நிலையில், தற்போது 22 குடும்பங்கள் இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் வீடுகள் சிதிலமடைந்ததால் காலி செய்துகொண்டு சென்றுவிட்டிருக்கிறார்கள்.

வேங்கை வயல் சென்ற சவுக்கு சங்கர் : கிராம மக்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் | Savukku Sankar Visit Vengaivayal Village

இவர்களுக்கு அரசு தொகுப்பு வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் சிபிசிஐடி போலீஸ் விசாரணை மீது நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். லோக்கல் போலீஸ் விசாரணை மிக மோசமாக இருந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இங்கே 3 பேரை விசாரித்திருக்கிறார்கள். அதில் 15 வயது மைனர் சிறுவனுக்கு விடியற்காலை 2 மணிக்கு சம்மன் கொடுத்துள்ளார்கள். விசாரிக்கும்போது பெற்றோர்கள் உடன் இல்லை. 15 வயது சிறுவனை விசாரிக்க விடியற்காலை 2 மணிக்கு சம்மன் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? இந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர் பத்மா என்றாலும் அவருடைய கணவர் முத்தையாதான் ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்டுள்ளார்.

அரசாங்கத்தின் மீது வருத்தம்

இந்த சம்பவத்தில், அவர்கள் முத்தையா மீதுதான் அவர்கள் சந்தேகத்தை எழுப்புகிறார்கள். ஏனென்றால், இந்த தண்ணீர் டேங்க் பராமரிப்பு கட்டுப்பாடு அவரிடம்தான் உள்ளது. முத்தையா வேங்கைவயல் பட்டியல் இன மக்கள் மீது சாதிய வன்மத்தோடு நடந்துகொண்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசினேன். இவர்களுக்கு அரசாங்கத்தின் மீது வருத்தம் இருக்கிறது.

வேங்கை வயல் சென்ற சவுக்கு சங்கர் : கிராம மக்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் | Savukku Sankar Visit Vengaivayal Village

இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதியதாக சின்ன குடிநீர் தொட்டி கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சின்ன குடிநீர் தொட்டி இருக்கக் கூடாது. இந்த சின்ன குடிநீர் தொட்டி கட்டுவதற்கு முன்பு, எல்லா மக்களுக்கும் பொதுவான குடிநீர் தொட்டி இருந்தது. அதிலிருந்துதான் எல்லா சமூக மக்களுக்கும் குட்நீர் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது.

மக்களின் கோரிக்கை

தனித் தனியாக குடிநீர் தொட்டி கட்டியதால்தான் இந்த பிரச்னை. பாதிக்கப்பட்ட மக்கள் முன்பு இருந்தது போலவே பொதுவான குடிநீர் தொட்டி வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது. ஆனால், இந்த அரசாங்கம் இந்த பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் வகையில் ஒரு குடிநீர் தொட்டியைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நாளைக்கு வேறு யாராவது இப்படி செய்தால், மீண்டும் இதே போல பிரச்னை உருவாகும். அதனால், எல்லா சமூகத்தினருக்கும் பொதுவான ஒரு குடிநீர் தொட்டியைக் கட்ட வேண்டும். அப்போதுதான் யாரும் இதுபோன்ற வேலையை செய்ய மாட்டார்கள் என்பதுதான் இந்த ஊர் மக்களின் கோரிக்கை” என்று சவுக்கு சங்கர் கூறினார்