கால் இல்லாம இருக்க முடியாது...என் கால்களையும் என் உயிரையும் காப்பாத்துங்க ஐயா!

Tamil nadu Government of Tamil Nadu Ma. Subramanian
By Thahir Dec 21, 2022 09:47 AM GMT
Report

என் காலையும் என் உயிரையும் காப்பாத்துங்க ஐயா என கண்ணீர் மல்க மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.

அரிவகை நோயால் பாதிக்கப்பட்ட மாணவி 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பனங்காட்டு தெரு அம்மன்நகரை சேர்ந்தவர் முத்தழகன். இவரது மனைவி கனிமொழி.

இந்த தம்பதிக்கு அபிநயா என்ற 13 வயது மகளும், ஆதித்யா என்ற 12 வயது இரண்டு குழந்தைகள் உள்ளனர். அபிநயா சீர்காழியில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

முத்தழகன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னாள் இறந்துவிட்டார். இதனால் கனிமொழி வயல் வேலைக்கு சென்று தனது இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில், அபிநயாவுக்கு காலில் எஸ்.இ.எல் என்ற அபூர்வ வகை நோய் ஏற்பட்டு இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

கால்களை அகற்ற மருத்துவர்கள் பரிந்துரை 

சிகிச்சைக்காக அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமடையாத நிலையில் அவரது கால்கள் இரண்டையும் அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அபிநயாவை சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அபிநயா தமிழக அரசின் உதவியை நாடியுள்ளார். இது குறித்து அவர் கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

save-my-feet-and-my-life-sir-student-crying

உயிரை காப்பாத்துங்க ஐயா!

அந்த வீடியோவில் மாணவி என் கால்களையும், என் உயிரையும் காப்பாற்றுங்கள் ஐயா என தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கும் அந்த கணம் பார்ப்போர் நெஞ்சை ரணமாக்குகிறது.

இது குறித்து திருச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், அபிநயா முதல்வருக்கு கோரிக்கை வைத்த வீடியோ வைரலானது.

அது எங்கள் கவனத்திற்கு வந்த பின்பு அபிநயாவை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வாத நோய் பிரிவில் அனுமதித்துள்ளோம்.

சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை நானே நேரில் சென்று சந்தித்து விசாரிக்க உள்ளேன். மாணவி அபிநயாவிற்கு உரிய சிகிச்சை வழங்கப்படும்.    

பத்திரிக்கை, ஊடகங்கள், சமூக வலைதளங்களில் இதுபோன்று கோரிக்கைகள் வரும் பட்சத்தில் அவை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.