புல்புல் பறவை மீது ஏறி பறந்தாரா சாவர்க்கர்? பாடப்புத்தகம் சொல்லும் புது தகவல்!
சாவர்க்கர் குறித்த சர்ச்சைக்குள்ளான தகவல் ஒன்று பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாவர்க்கர்
கர்நாடகாலில் சமீப காலமாக சாவர்க்கர் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடக அரசு வெளியிட்ட விளம்பரத்தில் சாவர்க்கரின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததோடு,
நாட்டின் முதல் பிரதமரான நேருவின் புகைப்படம் இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஷிவமோகாவில் அமீர் அகமது நகரில் உள்ள பள்ளிவாசல் அருகில், சாவர்க்கரின் பதாகைகளை வைக்க முயன்றபோது எழுந்த மோதலில் வன்முறை வெடித்தது.
பாடப்புத்தகம்
இதனைத் தொடர்ந்து, பாஜக சார்பில் கடந்த 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 8 நாட்களுக்கு சாவர்க்கர் ரத யாத்திரை தொடங்கப்பட்டது. அதனையடுத்து, சாவர்க்கரை முன்னிலைப்படுத்தும் அடுத்த ஸ்டெப்பாக,
கர்நாடகாவில் 8-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ‘காலத்தை வென்றவர்கள்’ என்கிற பெயரில் புதிதாக இணைத்துள்ள பகுதியில் சாவர்க்கர் பற்றிய தகவல் இடம் பெற்றுள்ளது. அதில், அந்தமான் சிறையில் ஈ, எறும்புகள் கூட நுழைய முடியாத இடத்தில் அடைக்கப்பட்டிருந்த சாவர்க்கர்,
புல்புல் - சர்ச்சை
தினந்தோறும் புல்புல் பறவை மீது அமர்ந்து சிறையில் இருந்து வெளியேறி நிலப்பகுதிக்கு வந்து சென்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளை சுட்டிக்காட்டி வரலாற்றில் இல்லாத ஒன்றை புனைவாக பாடப்புத்தகத்தில் கூறலாமா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த வாக்கியங்கள் உருவகத்திற்காக இடம் பெற்றுள்ளதாக பாடத்திட்டக்குழுவில் இருந்த உறுப்பினர்கள் விளக்கமளித்துள்ளனர். ஆனால் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி,
இது ஒரு உருவகம் போல் தோன்றவில்லை எனவும், 'வரலாற்று உண்மைகளை சிதைக்கும் முயற்சி எனவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கிண்டல் பதிவுகளையும், கேலி மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.