சவூதி அரேபியாவுடன் கைக்கோர்க்கும் பாகிஸ்தான் - அடித்தது ஜாக்பாட்
காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவு தராததால் சவூதி அரேபியாவுடன் கசந்து போன நட்பை பாகிஸ்தான் மீண்டும் புதுப்பித்துள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தான் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் சவூதி அரசு அந்நாட்டுக்கு நிதியுதவி தர முன் வந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்ததை சர்வதேச அளவில் பிரச்னையாக மாற்ற பாகிஸ்தான் முயன்ற போது இது உள்நாட்டு விவகாரம் என பல நாடுகளும் ஒதுங்கிக் கொண்டன.
அந்த வகையில் சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு நாடுகளும் இஸ்லாமிய தேசங்கள் என்ற வகையிலும், கலாச்சார, நட்பு ரீதியில் நெருக்கமான நாடுகள் என்ற அடிப்படையில் தங்கள் நாட்டுக்கு ஆதரவாக இருப்பார்கள் என பாகிஸ்தான் கருதிய நிலையில் பொதுவான நிலைப்பாட்டை இரு நாடுகளும் எடுத்தன. இதன் காரணமாக பாகிஸ்தானுக்கும், சவூதி அரேபியாவுக்கும் இடையேயான நட்பில் விரிசல் விழுந்தது.இதனால் சவூதி அளித்த 3 பில்லியன் டாலர் கடனில் உடனடியாக 2 பில்லியன் டாலர்களை பாகிஸ்தான் அரசு திரும்ப செலுத்த நேரிட்டது.
இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மூன்று நாள் பயணமாக சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். ரியாத்தில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை நேரில் சந்தித்து இம்ரான் கான் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் எதிரொலியாக தற்போது பாகிஸ்தானுக்கு 4.2 பில்லியன் டாலர்கள் கடனாக தருவதற்கு சவூதி அரேபியா முடிவெடுத்துள்ளது.