சாட்டை துரைமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

Arrest Sattai Durai Murugan Anti Threat Act சாட்டை துரைமுருகன்
By Thahir Jan 02, 2022 08:02 PM GMT
Report

சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு வேலை செய்யும் ஊழியர்களை தொழிற்சாலை நிர்வாகம் சுங்குவார்சத்திரம், வடக்குப்பட்டு, ஜமீன்கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விடுதிகளில் தங்க வைத்து இருந்தது.

ஜமீன் கொரட்டூர் புதுச்சத்திரம் பகுதியில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி இருந்த பெண் ஊழியர்கள் சாப்பிட்ட தரமற்ற உணவால் 100-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பூந்தமல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 8 பேர் நிலை என்ன ஆனது? என்பது குறித்து கேள்வி எழுப்பி பெண் ஊழியர்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் கே.சி.கணேசன், தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, அரசு அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட இளைஞர் பாசறை பொறுப்பில் இருக்கும் ‘யூடியூபரான’ திருச்சி, சண்முகா நகர், 10-வது குறுக்கு தெருவை சேர்ந்த துரைமுருகன் என்ற சாட்டை துரைமுருகன் (வயது 35) என்பவர் தரமற்ற உணவு சாப்பிட்ட பெண் ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்ததாக ‘யூடியூபில்’ செய்தி பதிவிட்டு இருந்தார். மேலும் நிறுவன ஊழியர்கள் குறித்தும் வதந்தி பரவியது. அது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக சாட்டை துரைமுருகன் மீது திருவள்ளூர் தாலுகா போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து திருச்சியில் பதுங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருவள்ளூர் தாலுகா போலீசார் திருச்சி போலீசார் உதவியுடன் கடந்த 19ந்தேதி கைது செய்தனர். மேலும் திருவள்ளூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் சாட்டை துரைமுருகன் மீது அவதூறு செய்தி பரப்புதல், உண்மைக்கு புறம்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் செய்தி வெளியிடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அவரை போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யூடியூபர் சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி, திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.