சாட்டை துரை முருகன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Arrest FIR sattai duraimurugan
By Thahir Oct 11, 2021 12:30 PM GMT
Report

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்கும் வகையில், நாம் தமிழர் கட்சி சார்பில் தக்கலை தாலுகா அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாட்டை துரை முருகன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு | Sattai Duraimurugan Arrest Fir

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய, அக்கட்சியின் பேச்சாளர் துரைமுருகன் என்பவர், தமிழக அரசையும், முதல்வரையும் கடுமையாக விமர்சித்து பேசியதுடன், நாங்கள் எல்லாம் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகள் ஆவோம்.

ஸ்ரீபெரும்புதூரில் நடந்தது நினைவு இருக்கிறதா? என பேசி கலவரத்தை தூண்டும் வகையிலான கருத்துக்களை கூறினார்.

இது தொடர்பாக தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் நேற்று இரவு துரைமுருகன் மீது, இந்திய தண்டனைவியல் சட்டப்பிரிவு 143, 153, 153A, 505 (2),506(i), 269 ஆகிய 6 பிரிவுகளில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முடிவடைந்த பின் சென்னைக்கு செல்ல முயன்ற துரைமுருகனை நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர்.

தக்கலை காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் விசாரணை நடந்தது. பின்னர் பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டு நீதிபதி தீனதயாளன் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 25ம் தேதி வரை துரைமுருகனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதை தொடர்ந்து துரைமுருகன் நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டார்.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மற்றொரு பேச்சாளர் ஹிம்லர் மீதும் மேற்கண்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.