தமிழக சட்டசபை தேர்தல் ஒத்திவைக்க முடியாது - சத்யபிரதசாகு திட்டவட்டம்

tamilnadu assembly pratha sahoo postponed
By Jon Mar 17, 2021 03:45 PM GMT
Report

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து தேர்தல் ஆணையம் சில முடிவுகளை எடுத்திருக்கிறது. பீகாரிலிருந்து 2 சுகாதார அதிகாரிகளை தமிழகத்திற்கு தமிழக தேர்தல் அதிகாரி கேட்டிருக்கிறார்கள். பீகாரில் கொரோனா கால கட்டத்தில் வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தேர்தல் பாதுகாப்பாக நடத்தப்பட்டுள்ளது. அப்போது அங்கு சுகாதாரப் பணியில் அதிகாரிகள் சுதிர்குமார், ரோகினி ஆகியோர் ஈடுபட்டார்கள்.

அவர்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறார்கள். அந்த 2 அதிகாரிகளும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளோடு இணைந்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்கள். அதனையடுத்து, மாதிரி வாக்குச்சாவடி மையத்தையும் பார்வையிட்டுள்ளனர்.

அதன் பிறகு தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார் சுகாதாரத்துறை அதிகாரிகள் இருவரும் கலந்து கொண்டு பாதுகாப்பாக தேர்தலை நடத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். அந்த கூட்டத்தில் பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டன.

அவர்களின் ஆலோசனை, வழிகாட்டுதலின்படி தேர்தல் பிரசாரம், ஓட்டு பதிவு, ஓட்டு எண்ணிக்கை போன்ற கொரோனா கால நடைமுறைகளை பின்பற்ற தமிழக தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேசுகையில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சட்டசபை தேர்தல் ஒத்திவைக்க வாய்ப்பு கிடையாது. பீகார் மாநிலத்தில் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கூட அங்கு தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். நத்தம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டிருக்கிறது.