சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை - எத்தனை நாட்கள் தெரியுமா?
தொடர் மழை காரணமாக ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் தரிசனம் செய்ய வருவது வழக்கம். இக்கோவிலுக்கு அம்மாவாசை அன்று நான்கு நாட்கள், பௌர்ணமி அன்று நான்கு நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக சதுரகிரி மலையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. கடந்த மாதம் மீண்டும் பௌர்ணமி நாள் அன்று பக்தர்கள் தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து உள்ளதால் அதிக அளவு நீர் வரத்து ஓடைகளில் காணப்படுகிறது.
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசைக்கு, அதாவது 2 முதல் 5 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.