சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு : காவலர் சாமதுரைக்கு இடைக்கால ஜாமீன்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் காவலர் சாமதுரைக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி தந்தை, மகன் இருவரையும் போலீஸார் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் வைத்து இருவரையும் போலீஸார் கடுமையாக தாக்கியதை அடுத்து பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதை கொலை வழக்காக பதிவு செய்து தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சோ்ந்த காவல் ஆய்வாளா் உள்பட 9 போலீஸாா் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்த கொலை வழக்கில் சிறையிலிருக்கும் காவலர் சாமதுரைக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாமதுரை தாயார் மருதகனி உயிரிழந்ததால் இறுதி சடங்கு செய்வதற்கு 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உயர் நீதிமன்றம் கிளை.