சாத்தான்குளம் வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டிய அதிரடி
சாத்தான்குளத்தில் மரக்கடை நடத்தி வந்த ஜெயராஜ்(60), செல்போன் கடை நடத்தி வந்த அவரது மகன் பென்னிக்ஸ்(31) இருவரையும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், காவல் நிலையத்தில் விடிய விடிய அவர்களை அடித்து சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் தந்தை, மகன் இருவரும் அடுத்த நாளே உயிரிழந்தனர். தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் சாத்தான்குளம் சம்பவத்தின் அதிர்வலைகள் இருந்தன.
இதனால் இந்த வழக்கில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதில் பால்துரை என்பவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார். மேலும் 9 பேரின் மீதான விசாரணை மதுரையில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ்,காவலர்கள் முருகன், முத்துராஜா, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
ஆனால் இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதன் பின்னர் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும், வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.