சாத்தான்குளம் வழக்கு: 9 பேருக்கும் மரண தண்டனை- நீதிபதி அதிரடி உத்தரவு
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 காவலர்களுக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ், செல்போன் கடை நடத்தி வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 19-ல் கட்டுப்பாட்டு நேரத்தை மீறி கடை நடத்தியதாக இருவரையும் விசாரணைக்காக போலிசார் அழைத்து சென்றனர்.
அங்கு இரவு முழுவதும் போலிசார் அடித்ததில் முதலில் பென்னிக்ஸ், அடுத்து ஜெயராஜ் உயிரிழந்தனர்.
தொடர்ந்து கொலை வழக்காக பதிவு செய்த சிபிஐ, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 10 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
தண்டனை விபரங்கள்
இதில் பால்துரை என்பவர் மதுரை சிறையிலேயே உயிரிழந்தார், கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில் 1500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது, அதில் இது சாதாரண குற்றமல்ல, இரவு முழுவதும் தந்தை- மகனை நிர்வாணப்படுத்தி கொடூரமாக அடித்துள்ளனர்.
பழிவாங்கும் நோக்கத்துடன் இது நடந்துள்ளது, வெறும் ஆயுள் தண்டனை வழங்கினால் அச்சம் இருக்காது என தெரிவித்தார்.

பேனா நுனியை முறித்த நீதிபதி
தொடர்ந்து வழக்கில் கைதான 9 போலிசாருக்கும் மரண தண்டனை விதித்ததுடன் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனை மற்றும் 84 லட்ச ரூபாய் அபராதம் விதித்தார்.
பாதிக்கப்பட்ட பென்னிக்ஸின் தாயாருக்கு 1.04 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஆணையும் பிறப்பித்தார்.
தீர்ப்பை வாசித்து முடித்ததும் பேனா நுனியை நீதிபதி முத்துக்குமரன் முறித்தது குறிப்பிடத்தக்கது.