சாத்தான்குளம் விவகாரம் - முக்கிய குற்றவாளியான காவல் ஆய்வாளர் எழுதிய கடிதம் : வெளிவந்த அதிர்ச்சி தகவல்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020, ஜூன் 19-ல் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி இருவரையும் போலீசார் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் வைத்து இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதில் முதலில் பென்னிக்ஸ், அடுத்து ஜெயராஜ் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் காவலர்கள் என 9 பேரை சிபிஐ கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தது. இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கில் தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கின் முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தற்போது மதுரை மத்தியச் சிறையில் இருக்கிறார். சிறையிலிருக்கும் அவர், மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில், `இந்த வழக்கில் ஏ-2 முதல் ஏ-9 வரை குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள்தான் ஜெயராஜ், பென்னிக்ஸை அடித்து கொலை செய்தார்கள்.
கடந்த மார்ச் 26-ம் தேதி காலை 6 மணியளவில் சிறையில் உள்ள மற்ற எட்டு பேரும் சேர்ந்து என்னைக் கொலை செய்ய முயற்சி செய்தார்கள். இந்தச் சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி-யில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தவேண்டும். இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஸ்ரீதர் நீதிமன்றத்துக்கு இப்படி ஒரு கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.