சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கையசைத்த சசிகலா: வெளியான புகைப்படம்

hospital admk dmk
By Jon Jan 21, 2021 07:21 PM GMT
Report

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு நேற்று (20.01.2021) மதியம் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதலில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் கொரோனா பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவில் சசிகலாவுக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலை குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த அரசு மருத்துவமனையின் இயக்குனர் மனோஜ், "மூன்று நாட்களுக்கு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சசிகலா இருப்பார்.

கண்காணிப்புக்காகவே ஐ.சி.யூ.வில் சசிகலா வைக்கப்பட்டுள்ளார்; அவர் ஐ.சி.யூ. நோயாளி அல்ல. சசிகலா உடல்நிலை சீராக உள்ளது; அவர் காலை உணவருந்தினார்; எழுந்து நடந்தார்.

விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலாவுக்கு சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. சி.டி.ஸ்கேனை ஆய்வு செய்த பிறகே சசிகலாவின் உடல் நிலை குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.