சசிகலாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி வரவேற்புக்கு அமமுகவினர் ஏற்பாடு
சசிகலா அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி வரவேற்புக்காக அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சசிகலா அவர்களை சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தணடனைப் பெற்று கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலையானார். முன்னதாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
தற்போது அவர் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பவுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வேலூர் மாவட்ட எல்லையான மாதனூர் அருகே சசிகலாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்க அனுமதி அளிக்க வேண்டும் என குடியாத்தம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், வேலூர் புறநகர் மாவட்ட அ.ம.மு.க. அமைப்பு செயலாளருமான ஜெயந்தி பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் மனு அளித்தார்.
அந்த மனுவில், ‘‘பெங்களூவில் இருந்து காரில் சென்னை நோக்கி வரும் சசிகலாவிற்கு வேலூர் மாவட்ட எல்லையான மாதனூரை அடுத்த கூத்தம்பாக்கத்தில் அ.ம.மு.க. சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க உள்ளோம்.
காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை தனியார் வாடகை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்க தேவையான அனுமதி வழங்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.