தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்க போடப்பட்டிருந்த மேடைகள், பேனர்கள் அதிரடியாக அகற்றம்
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27ம் தேதி விடுதலையானார். விடுதலை ஆவதற்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணம் அடைந்தார்.
பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மருத்துவமனையிலிருந்து பெங்களூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி உள்ளார். கர்நாடக - தமிழக எல்லையான ஜூஜூவாடியில் மேளதாளம் முழங்க ஐந்தாயிரம் பேர் சசிகலாவை வருவதற்கு தயாராக உள்ளனர். இதையடுத்து, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சென்னை அழைத்து வரப்படுகிறார்.
சென்னை எல்லையான செம்பரம்பாக்கம் தொடங்கிய நசரத்பேட்டை, குமணன்சாவடி, போரூர், கிண்டி கத்திபாரா என டி நகர் வரை 57 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை திரும்பும் சசிகலாவை வரவேற்க போடப்பட்டிருந்த மேடைகள், பேனர்கள் அகற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த மேடைகள், பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.