இரட்டை இலைக்கு வாக்களிக்க கூறினார் சசிகலா: அமைச்சரின் பரபர பேச்சு

minister election sasikala aiadmk
By Jon Mar 30, 2021 06:25 PM GMT
Report

சசிகலா மறைமுகமாக இரட்டை இலைக்கு வாக்களிக்க கூறியதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்ததால் பரபரப்பானது. கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக அதிமுக சார்பில் கடம்பூர் ராஜு போட்டியிடுகிறார். தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர், நியுஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது அவர், ‘10 ஆண்டுகளாக கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளது. நானும் 10 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் செயல்படுத்தியுள்ளேன். சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து உள்ளேன். இன்றைக்கு மக்களின் வேட்பாளராக என்னை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டால் என்னை எதிர்த்து போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள்.

அ.தி.மு.க சிறப்பான வெற்றி பெறும். கோவில்பட்டி தொகுதியில் கடுமையான போட்டி இல்லை, விளம்பரம் தான் அப்படி செய்யப்படுகிறது. உண்மையான நிலை அப்படி இல்லை. கிராமம் தொடங்கி நகராட்சி வரை நான் 10 ஆண்டு காலம் செய்த சாதனைகளுக்கு அங்கீகாரம் தருவோம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். தீப்பெட்டி தொழிலுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு, கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன்.

இரட்டை இலைக்கு வாக்களிக்க கூறினார் சசிகலா: அமைச்சரின் பரபர பேச்சு | Sasikala Vote Aiadmk Minister Sensational Speech

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி 10 ஆண்டு காலம் அமைதியாக உள்ளது. அனைவரும் ஒற்றுமையாக வாழ நான் மாதிரியாக இருந்து உருவாக்கி உள்ளேன். தேர்தலுக்கு முன்பே அனைத்து சமூக மக்களும் ஒருங்கிணைந்து எனக்கு பாராட்டு கூட்டம் நடத்தினர். அதே நிலை தான் தற்போதும் உள்ளது. கடந்த முறை கூட்டணி இல்லாமால் வெற்றி பெற்றேன். தற்போது அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

என்னை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் நண்பர்கள் தான். பொதுப் பிரச்சினைகளில் அனைத்து கட்சியினருடன் இணைந்து பணியாற்றி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளேன். எனவே அனைவரும் எனக்கு நண்பர்களே. அ.ம.மு.க நிர்வாகி சி.ஆர்.சரஸ்வதி பேசுகையில் டி.டி.வி.தினகரன் போட்டியிட வேண்டும் என்று அமைச்சர் சொன்ன வேண்டுகோளை ஏற்று தான் அவர் இங்கு போட்டியிடுவதாக குறிப்பிட்டார். அவர் நகைச்சுவையாக சொன்னாலும் நிச்சயமாக நான்தான் வேண்டுகோள் வைத்தேன்.

இந்த வேண்டுகோளை ஏற்ற மாதிரி 18 சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்து சென்ற போது டி.டி.வி.தினகரனின் நண்பர்களாக இருந்து நாங்கள் சிலர் அவருக்கு வேண்டுகோள் வைத்தோம். ஒரு நிலைப்பாட்டை எடுக்க சொல்லி இருந்தோம். அந்த நிலைப்பாட்டை தினகரன் எடுத்து இருந்தால் அவருடைய நிலைமையே வேறு. ஆனால் அன்றைக்கு கேட்பார் பேச்சை கேட்டு தவறான முடிவு எடுத்தது காரணமாக 18 சட்டமன்ற உறுப்பினரின் வாழ்க்கை போச்சு. 18 சட்டமன்ற உறுப்பினர்களின் நிலை கேள்விக்குறியாகி, பதவியை இழந்து நடுரோட்டில் நின்றார்கள்.

தவறான முடிவு எடுத்த காரணத்தினால் தினகரன் தனியாக ஒரு அணியை ஆரம்பித்து, அமமுகவை கட்சி என்று கூட சொல்லமாட்டேன். அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை நாங்கள் அணியாக நினைப்போம். இந்த நிலைக்கு டிடிவிதினகரன் தள்ளப்பட்டுள்ளார். தேர்தலுக்குப் பிறகும் டி.டி.வி.தினகரனுக்கு சில வேண்டுகோளை வைப்போம். அதை ஏற்றுக்கொண்டால் அவருக்கு இன்னும் நல்லது.

இரட்டை இலையில் வெற்றி பெற்று வந்தால் தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க முடியும். வேறு சின்னத்தில் வெற்றி பெறுபவர்கள் ஜெயலலிதா ஆட்சி அமைக்க முடியாது. ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் ஆட்சி அமைத்தார்.

அவர் மறைவுக்குப் பின்பு நான்கு ஆண்டுகளாக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் சிறப்பாக நடத்தி உள்ளனர். மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளது என்பது அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று மறைமுகமாக கூறியுள்ளார். இரட்டை இலை வெற்றி பெற்றால்தான் ஜெயலலிதாவின் ஆட்சி. இதைத்தான் சசிகலா மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்பது எங்களுடைய கருத்து என்று தெரிவித்தார்.