சசிகலா உங்களிடம் பேசுவார் - டிடிவி தினகரன் சூசகமாக பதில்
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிற சூழ்நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த மாதம் தமிழகம் வந்த சசிகலா தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் சசிகலா என்ன நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சசிகலாவை இன்று டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “அதிமுக - அமமுக இணைப்பு பற்றி வரும் செய்திகள் எல்லாம் யூகங்கள் தான், அதில் உண்மை இல்லை. திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான் ஒரே நோக்கம். அமமுக தலைமையில் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திப்போம். அமமுக தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் தான் கூட்டணி.
கூட்டணி தொடர்பாக பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் அது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும்” என்றார். அதிமுக, பாஜகவை இணைத்துக் கொள்வீர்களா என்கிற கேள்விக்கு வெளிப்ப்டையாக பதில் சொல்லாமல் திமுகவை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் கட்சிகள் அமமுகவின் தலைமையை ஏற்றுக்கொண்டால் யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம் எனத் தெரிவித்துள்ளார்.
அமமுக - அதிமுக இணைப்பை பாஜக வலியுறுத்தி வருவதாகவும், காங்கிரஸ் - டிடிவி தினகரன் உடன் ஒருபக்கம் பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகும் நிலையில் டிடிவி தினகரன் இந்த பேட்டி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.