சசிகலாவின் திடீர் அறிவிப்பு: அரசியல் தந்திர நடவடிக்கையா? பக்கா மாஸ்டர் ப்ளான்
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை முடிந்ததும் சசிகலா விடுதலையான பின்னர் அரசியல் ரீதியாக அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்பட்டது. பல கார்கள் அணிவகுக்க, தொண்டர்கள் சூழ 24 மணிநேர பயணத்துக்கு பின்னர் தமிழகம் வந்த சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் பாஜக-வும் சசிகலாவை அதிமுகவுடன் இணைத்துக் கொள்ள அதிமுகவின் முக்கிய புள்ளிகளுக்கு உத்தரவிட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. இதற்கு முன்னதாக, சசிகலா தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு, மார்ச் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலா அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்திருக்கிறார்.
இதற்கு பாஜக-வின் அழுத்தம் காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டாலும், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார் என ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். இந்நிலையில் சசிகலாவின் இந்த முடிவு நிரந்தரமல்ல என்றும், தேர்தல் முடிந்த பின்னர் சசிகலாவின் அரசியல் பயணம் குறித்து தெரியவரலாம் எனவும் கூறப்படுகிறது.
சசிகலாவை அதிமுக-வுக்குள் இணைக்க முக்கிய பிரபலங்கள் நோ சொன்ன நிலையில், அவர்களது செயல்பாடு இந்த தேர்தலில் எப்படியிருக்கிறது என்பதை பார்க்கவே சசிகலா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை அவர்கள் சிறப்பாக செயல்படாமல் தோல்வியை சந்திக்க நேரிட்டால், நேரடியாக அதிமுக-வுக்குள் நுழைந்து விடலாம் என்பதே அவரது திட்டமாக இருக்கும்.
அந்நேரத்தில் தொண்டர்களும் சசிகலாவின் வருகையை எதிர்பார்த்து இருப்பார்கள், எனவே அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும் சுலபமான ஒன்று, எனவே சசிகலாவின் இந்த முடிவை அரசியல் ராஜதந்திர நடவடிக்கையாகவே பார்க்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.